

தாம்பரம்: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலையுண்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாயாரை நேற்று சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் கடந்த டிச.31 அன்று சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த கொலையை மறைக்க கூர்நோக்கு மேலாளர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், தலைமைக் காவலர் ஜெயராஜ், சரஸ்வதி, சாந்தி ஆகியோர் சிறுவனின் தாயார் பிரியாவை இரண்டு நாட்களாக அடைத்து வைத்து மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டுள்ளனர்.
இக்கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரையும் கைதுசெய்வதுடன், சிறுவனின் தாயாரை மிரட்டி பிரேத பரிசோதனையை 2 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தி வழக்கை மூடி மறைக்க, திட்டமிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த வழக்கை முறையாக நடத்தி தண்டனைப் பெற்றுதர வேண்டும்.
சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வசிப்பதற்கு அரசு வீடும், அரசு வேலையும், குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பதற்கான வசதிகளையும் செய்து தரவேண்டும். அனைத்து கூர்நோக்குஇல்லத்தை முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவர்களை பணியமர்த்தி நல்ல சிந்தனையுள்ள இளைஞர்களாக வளர்த்தெடுக்க ஆவண செய்யவேண்டும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிஉள்ளேன். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), பாரதி அண்ணா (செங்கல்பட்டு), தாம்பரம் பகுதி செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.