Published : 23 Jan 2023 04:25 AM
Last Updated : 23 Jan 2023 04:25 AM

மதுரை அரசு மருத்துவமனை முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்த தடை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருவோர், தங்கள் வாகனங்களை பனகல் சாலையோரத்தில் நிறுத்துவதை தடுக்க போலீஸார் அங்கு பேரிகார்டுகளை வைத்து ‘நோ பார்க்கிங்’ பகுதியாக அறிவித்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் போதிய வாகன நிறுத்துமிட வசதியில்லை. ஒரே ஒரு கட்டண பார்க்கிங் மட்டுமே உள்ளது. அங்கும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில மாதங்களாக மருத்துவமனைக்கு வருவோர், தங்கள் வாகனங்களை மருத்துவமனை முன் பனகல் சாலையில் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் நிறுத்தி வருகின்றனர்.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அங்கு வாகனங்களை நிறுத்துவோரிடமும் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்தனர். இங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களும் அடிக் கடி திருடுபோயின. அதற்கு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பொறுப்பேற்க மறுத்தனர்.

வாகன திருட்டுகளை தடுக்க முடியாமலும், திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்க முடியாமலும் போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில், மாநகர போலீஸார் தற்போது மருத்துவமனை முன் உள்ள சாலையோரத்தை‘நோ பார்க்கிங்’ பகுதியாக அறிவித்து வாகனங்களை நிறுத்தத் தடை விதித்துள்ளனர்.

வாகனங்களை நிறுத்துவதை தடுக்க மருத்துவமனை முன் அமெரிக்கன் கல்லூரியை ஒட்டிய நடை பாதையில் பேரிகார்டுகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வாகனங்களில் வருவோர், மருத்துவமனை வளாகத்திலும் இடம் இல்லாமல், சாலையோரத்திலும் நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, கோரிப்பாளையம் பழைய அரசு மருத்துவமனை கட்டிட வளாகத்தில் நோயாளிகள், பார்வை யாளர்களின் வானகங்களை நிறுத்துவதற்கு போதுமான பார்க்கிங் வசதியை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘மருத்துவமனை வளாகத்தில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்துவதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். சாலையோரத்தில் நிறுத்த அனுமதித்தால் வாகனங்கள் திருடுபோகின்றன. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x