Published : 23 Jan 2023 04:27 AM
Last Updated : 23 Jan 2023 04:27 AM
மதுரை: மாநில அரசின் நிர்வாகத்தை யொட்டியே ஆளுநரின் செயல் பாடு இருக்க வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தெரிவித்தார்.
திமுக வழக்கறிஞர் அணி சார்பில், ‘அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும்‘ என்னும் தலைப்பில் சட்டத் துறை கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை செயலர் என்ஆர்.இளங்கோ எம்.பி. தலைமை வகித்தார். வழக்கறிஞர் கலாநிதி வரவேற்றார். இதில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி பேசியதாவது:
விக்டோரியா மகாராணி ஆட்சிக் காலத்தில் அவரது ஏஜெண்டுகளாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆளுநர்கள் தேவையா என்ற விவாதம் தொடக்கம் முதலே உள்ளது. இவர்களால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மக்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அவர் மத்திய அரசின் ஊழியர் அல்ல, மாநில அரசு நிர்வாகத்தையொட்டியே அவர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி சிவா எம்.பி. பேசிய தாவது: பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் ஆளுநர்களின் சர்ச்சைகள் தொடர்கின்றன. அரசியல் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த முடியாத சூழலில், மாநில அரசுக்கு எதிரான செயலில் ஆளுநர்கள் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அரசியல்வாதி போன்று செயல்படு வதைத் தவிர்க்க வேண்டும். மாநில அரசின் முடிவை தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல். அமைச்சரவை உரையில் உள்ள தகவல்களை வாசிக்கத் தவிர்த்ததால், அவருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற இவர் யார்?.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசு பக்கமே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும் என பேசுகிறார். அவர் நிதானமாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT