

தேனி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமராஜ், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்லத் திருமண விழா கம்பத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொள்கிறார். அவர் இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு தேனி மாவட்டத்துக்கு முதல் முறையாக வருவதால் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தேனி அன்னஞ்சி புறவழிச் சாலை பிரிவில் பூரண கும்ப மரியாதையுடன் பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முன் னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன் நேற்று பார்த்தனர்.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுவது பொய். எங்களோடு ஓ.பன்னீர்செல்வத்தை ஒப்பிடுவதையே அவமானமாகக் கருதுகிறோம். ஓபிஎஸ் சுண்டெலி, இபிஎஸ் யானை. யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்?.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத்தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே ஜக்கை யன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.