Published : 23 Jan 2023 04:37 AM
Last Updated : 23 Jan 2023 04:37 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளவர்கள், அதை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்தார். இத்தொகுதியில் உரிமம் பெற்ற 295 துப்பாக்கிகள் உள்ள நிலையில், அருகில் உள்ள காவல்நிலையங்களில் உரிமதாரர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்து ரசீது பெற்று வருகின்றனர்.
பறக்கும்படை சோதனை: இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில், 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தொகுதியின் எல்லைப் பகுதிகளான கருங்கல்பாளையம், பிராமண பெரிய அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்களில் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கரைவேட்டி விற்பனை: தேர்தல் பணியாற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் கட்சி கொடியின் வண்ணம்கொண்ட வேட்டி, சேலைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஈரோடுபன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன்கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்கேவி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் அரசியல் கட்சிகள் கொடிகளின் வண்ணம் கொண்ட வேட்டி, சேலை, துண்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT