Published : 23 Jan 2023 04:43 AM
Last Updated : 23 Jan 2023 04:43 AM
ஈரோடு: திமுகவை தோற்கடிக்க அனைத்துவியூகங்களையும் பாஜக வகுக்கும், என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
ஈரோடு பாஜக அலுவலகத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளரைத் தோற்கடிப்பது தொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா அல்லது வேறு வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமா என்பது குறித்து இரு நாட்களில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்கள் கருத்து.
அதே நேரத்தில், இரு அணிகளுக்கும் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட மாட்டோம். இன்னும் கால அவகாசம் இருக்கும் நிலையில், இரு அணிகளும் ஒன்றாக சேர்ந்து நிற்கலாம். இருப்பினும், திமுகவை தோற்கடிக்க அனைத்து வியூகங்களையும் எடுப்போம்.
இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமானால், திமுக அரசின் ஊழலை மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குகளைச் சேகரிப்போம். இடைத்தேர்தலில் பாமக எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தாலும், அக்கட்சி எங்கள் கூட்டணியில் தான் உள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT