

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை கொண்டு வர வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புதிய தரிசன பெதஸ்தா திருச்சபை போதகர் டி.சாமுவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் 300க்கும் மேற்பட்டோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
''இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்கின்ற நமது கொள்கை முழக்கத்தின் வழியில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கி, பல்வேறு நலஉதவிகளும் வழங்கியுள்ளேன்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் பொதுமக்கள் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பொதுப்பணித்துறையில் இவர் பணியாற்றும்போதே இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை கொண்டு வர வேண்டும். இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்ய வேண்டுமென உலகில் உள்ள எல்லா மதங்களும் வலியுறுத்தி வருகின்றன. இது தான் நம் கட்சியின் கொள்கையாக இருந்து செயல்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதம் என்றாலேயே டேஞ்சர், டேமேஜ் என ஆகிவிட்டது. பெரியார், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்களும் இறந்தது இந்த மாதத்தில் தான். தானே புயல் தேசம், கடந்த ஆண்டு கனமழை இந்த ஆண்டு வார்தா புயலால் சேதமும் ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், புறநகர் பகுதிகளில் இன்னும் நிலைமை சீராகவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் தேமுதிக இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், தேமுதிக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.