Published : 25 Dec 2016 10:36 AM
Last Updated : 25 Dec 2016 10:36 AM

குடும்ப அட்டை தொடர்பான 5 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

தமிழகத்தில் இதுவரை குடும்ப அட்டை தொடர்பாக நுகர்வோர் குறைதீர் முகாமில் வழங்கப்பட்ட 5 லட்சத்து 35 ஆயிரத்து 972 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர் களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமையன்று குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து தாலுகா மற்றும் சென்னை நகர மண்டலங்களில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் உரிய ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பம் பெறுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். முகாம் நடைபெறும் நாட்களில் பிற்பகல் 1 மணி வரை பெறப்படும் மனுக்கள் மீது அன்று மாலைக்குள் தீர்வு காணப்படுகிறது.

சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை மயிலாப்பூர் மண்டலத்தில் சிருங்கேரி மடம் சாலையில் நேற்று நடைபெற்ற நுகர்வோர் குறைதீர் முகாமில் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாட்டில் இன்றுவரை 5 லட்சத்து 56 ஆயிரத்து 948 மனுக்கள் பெறப்பட்டு, 5 லட்சத்து 35 ஆயிரத்து 972 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை நகரில் மட்டும் செயல்படும் 17 மண்டலங்களில் 96 ஆயிரத்து 755 மனுக்கள் பெறப்பட்டதில் 85 ஆயிரத்து 980 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x