Published : 22 Jan 2023 05:05 AM
Last Updated : 22 Jan 2023 05:05 AM

மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ளுங்கள்: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: எந்த மாநிலத்துக்கு சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்று கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆளுநர் கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கைகளால், வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. என்னுடைய பணி அனுபவத்தில் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் மொழியை கற்று கொள்ள முயற்சி செய்துவருகிறேன். தற்போது தமிழில் படிக்கிறேன். தமிழில் பேசுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். தமிழகம் சிறந்த இடம். இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள். தமிழ் மொழியும், இலக்கியங்களும் மிகவும் பழமையானவை. 2 ஆயிரம் ஆண்டு கலாச்சாரம், பண்பாடு தமிழகத்தில் உள்ளது. தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள்.

பிரிட்டிஷ் மிசினரி வந்தபோது தான் தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்தினர். குறிப்பாக, பல ஆண்டுகளாக இருந்த ராமேசுவரம் முதல் காசி வரை செல்லும் முறையை நிறுத்த முயற்சித்தனர். மாநிலங்களில் ஆங்காங்கே சிறு, சிறு பிரச்சினை இருந்தாலும், இந்திய மக்கள் ஒற்றுமையின் பலத்தால் இணைந்து இருந்தனர். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இங்கு வாருங்கள். தமிழகத்தின் கட்டிடக்கலை அத்தனை அழகு கொண்டது. ராமேசுவரம், மீனாட்சி கோயில்கள் அனைத்து சிறப்புகளையும் கொண்டது.

எந்த மாநிலத்துக்குச் சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்று கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும்.

நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள். உங்கள் பணியை செய்யுங்கள். உங்கள் பணியில் நீங்கள் சிறந்தவராக விளங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x