Published : 22 Jan 2023 05:24 AM
Last Updated : 22 Jan 2023 05:24 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கியது திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக அமைச்சர்கள் நேரு, முத்துசாமி ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதர வாக திமுக நேற்று பிரச்சாரத்தை தொடங்கியது.

இங்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நேற்று, அமைச்சர்கள் முத்துசாமி, கே.என். நேரு ஆகியோர், தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் பிரச்சாரத்தை தொடங்கினர். இருவரும் வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: வரும் நாட்களில் திமுக அமைச்சர்களும் பிரச்சாரம் மேற்கொள்வர். முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவது நியாயமற்றது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எனும் வாக்குறுதியை முதல்வர் உறுதியாக நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிதி நிலையை படிப்படியாக நாங்கள் சீராக்கி வருகிறோம். நிதி நிலையைப் பொறுத்து மக்கள் நலத் திட்டங்களும், தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார் என்றார்.

அமைச்சர் நேரு கூறியதாவது: சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிப்பது இயற்கையானது. உண்மையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர். கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம் என்றார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x