Published : 22 Jan 2023 04:15 AM
Last Updated : 22 Jan 2023 04:15 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கருத்துரு அளித்துள்ளது.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 3-வது வழித்தடத்தில் பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆற்றில் கடலோர ஒழுங்குமுறை மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இவற்றில் ஒன்று மாதவரம் - சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.8 கி.மீ.). இந்த வழித்தடத்தில், மாதவரம் பால் பண்ணையில் இருந்து கெல்லீஸ் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன. தற்போது வரை 336 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோல, மயிலாப்பூரில் இருந்து பசுமை வழிச்சாலை வழியாக சோழிங்கநல்லூரை இணைக்கும் வகையில், பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இதற்கிடையே, மயிலாப்பூர் மற்றும் தரமணியில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே சுரங்க ரயில்பாதை அமைப்பது மற்றும் அடையாறு ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்க ரயில் பாதை அமைப்பது ஆகியவற்றுக்காக கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரி இருந்தது.
இந்நிலையில், 3-வது வழித்தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க மத்தியசுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கருத்துரு அளித்துள்ளது. அதன்படி, அடையாறு ஆற்றின் குறுக்கே 666.03 மீட்டர்,தரமணியில் 495.5 மீட்டர் நீளத்துக்கும், மயிலாப்பூரில் 58.33 மீட்டர் நீளத்துக்கும் சுரங்க ரயில்பாதை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கருத்துரு அளித்துள்ளது.
இதேபோல், மயிலாப்பூரில் பக்கிங்காம் கால்வாய்க்கு அருகில் 523.02 சதுர மீட்டரிலும், தரமணியில் 156.04 சதுர மீட்டரிலும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT