Published : 22 Jan 2023 04:17 AM
Last Updated : 22 Jan 2023 04:17 AM
சென்னை: சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை ரூ.641 கோடியில் மீட்டெடுத்து சீரமைக்க அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,100 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. சென்னையை மாசு இல்லாத தூய்மையான நகரமாக பராமரிக்கவும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கவும், உரமையங்களை வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், பெருங்குடிகுப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.354 கோடியில் சுமார் 200 ஏக்கர்நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை பயோ மைனிங் முறையில்பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
அடுத்தகட்டமாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 252 ஏக்கரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வரும் இடத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 66.52 லட்சம் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்ட நிதி, மாநில அரசு நிதி மற்றும் மாநகராட்சி நிதி பங்களிப்பில் ரூ.641 கோடியில் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
2 ஆண்டுகளில் நிறைவடையும்: இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT