

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்துள்ள மணப்பட்டில் திரைப்பட நகரம் அமைக்க, பூர்வாங்க பணிகள் தொடங்க காலதாமதமாகிறது. அங்கு ஏற்கெனவே அமைக்கப்பட்ட குடில்கள், கட்டிடங்கள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரெஞ்சு பாரம்பரிய கட்டிடங்கள், சுற்றுலா இடங்களை காண பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலாத் திட்டங்கள் மூலம் வருவாய் பெருக்குவதற்கான திட்டங்களை புதுச்சேரி அரசு முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மணப்பட்டில் 100 ஏக்கரில் திரைப்பட நகரமும், பொழுதுபோக்கு மையமும் அமைக்கப்படும் என அண்மையில் அரசு அறிவித்தது. ஏற்கெனவே அங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் குடில்கள், சில கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் திரைப்பட நகரமும், பொழுதுபோக்கு மையம்(தீம் பார்க்) அமைப்பதற்காக கன்சல்டன்சி நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விடும் பணி தாமதமாகி வருகிறது.
ஏற்கெனவே அங்கு அமைக்கப்பட்ட குடில்கள் வீணாகி சாய்ந்து கிடக்கின்றன. கட்டப்பட்ட சில கட்டிடங்களும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. தற்போது இவைகளை மது பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மணப்பட்டு கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விட்டுசெல்லும் பிளாஸ்டிக் கழிவுகள்அகற்றப்படாமல் அங்கேயே கிடக்கின்றன.
அழகிய தோற்ற மளிக்கும் அந்த இடம் பொலி விழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திரைப்பட நகருடன் கூடிய தீம் பார்க் அமைக்கும் பணியை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் கேட்டபோது, ‘‘மணப்பட்டில் என்ன மாதிரியான வருவாய் கிடைக்கும் என்பது அறிய கன்சல்டன்சி போட உள்ளோம். இதற்கான டெண்டர் விடப்பட்ட பிறகு பணிகளை நிறைவேற்றி அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஓராண்டுக்கு மேலாகும்.
பாண்டி மெரினா, சின்னவீராம்பட்டினம் போன்ற கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவருவதையும், பயன்படுத்துவதையும் தடுக்க 10 பேர் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மணப்பட்டு கடற்கரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு அங்கும் பிளாஸ்டிக் தடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’’என்று தெரிவித்தார்.