

விழுப்புரம்: தமிழகத்தில் நலிவுற்ற நிலையில் இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின்போது இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2004-ம்ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி அரிசி அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள், ஆதரவற்றோர், முதியோர் உள்ளிட்டவர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து 2012-ம் ஆண்டு 'இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்' என்ற பெயரை 'விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்' என மாற்றினார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு பல வண்ணங்களில் 15 டிசைன்களுடன் சேலைகளும், 5 டிசைன்களில் வேட்டிகளும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த ஆண்டு பொங்கலுக்கு செயல்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 நியாய விலைக் கடைகளின் மூலம் அரிசி அட்டை வைத்துள்ளோர், ஆதரவற்றோர், முதியோர் உள்ளிட்ட 10 லட்சத்து 56 ஆயிரத்து 614 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற நிலையில், பொங்கல் முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை யாருக்குமே விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப் படவில்லை.
பொங்கலுக்காக முதல்கட்டமாக ஒரு லட்சம் செட் வேட்டி, சேலைகள் மட்டுமே கடந்த 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தது. இவற்றை திண்டிவனத்தில் பார்வையிட்ட ஆட்சியர் மோகன் விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கலுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து வேட்டி, சேலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் தினத்தன்று அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான 10 லட்சத்து 56 ஆயிரத்து 614 செட் வேட்டி, சேலைகளில் இதுவரை 40 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. குறைந்த அளவிலான வேட்டி, சேலைகளை நியாயவிலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்ப முடியாமல் அந்தந்த வருவாய் வட்டங்களில் உள்ள சமுதாய கூடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 39 ஆண்டுகளாக பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்த விலையில்லா வேட்டி, சேலைகள் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படாதது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.