அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் சுனாமி குடியிருப்புவாசிகள்: அதிகாரிகள் மீது புகார்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் சுனாமி குடியிருப்புவாசிகள்: அதிகாரிகள் மீது புகார்
Updated on
2 min read

பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளில் இன்னும் அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லை என அங்கு வசிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உலக வங்கி நிதி உதவியுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக அரசு கட்டிக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சென்னை அடுத்த எர்ணாவூரில் 3,616 அடுக்குமாடி குடியிருப்புகளும், செம்மஞ்சேரியில் 6,800 வீடுகளும் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், மயிலாப்பூர் நொச்சிக்குப்பம், டுமிங்குப்பம், திருவான்மியூர், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளில் தற்காலிக சுனாமி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.

குடியிருப்புகள் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என அங்கு வசிக்கும் மக்கள் புகார் கூறுகின்றனர். இதுபற்றி சுனாமி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் கேட்டபோது, ‘‘அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு, குப்பை, சாக்கடை அடைப்பு ஆகிய பிரச்சினைகளால் பெரிதும் தவிக்கிறோம். தொடக்கப் பள்ளி களோ, பாலர் பள்ளிகளோ இல்லை. இதுகுறித்து, சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இப்பகுதியில் மாநகராட்சியினர் குப்பை கழிவுகளை சரியாக அகற்றுவதில்லை. குடியிருப்பு களை சுற்றிலும் எப்போதும் கழிவுநீர் வழிந்துகொண்டே இருக்கிறது. பிளீச்சிங் பவுடர்கூட தெளிப்பதில்லை. கொசு மருந்தும் அடிப்பதில்லை. தடுப்பூசியும் போடப்படுவதில்லை.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பலர் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இனியா வது தொற்றுநோய் வராமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

எர்ணாவூர் பகுதியில்..

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு வாசிகள் கூறும்போது, ‘‘மீன் வியாபாரம் செய்வதற்கு தனியாக இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அந்த இடத்தை விட்டுவிட்டு குடியிருப்பைச் சுற்றி பல இடங்களில் மீன் விற்கின்றனர். இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால்தான் சுற்றுப்புற சுகாதாரம் அதிகமாக பாதிக்கப்படுகிறது’’ என்றனர்.

‘‘எங்களின் குடியிருப்புகளை விட மட்டமான வீடுகளை எங்கும் பார்க்க முடியாது. பல வீடுகள் ஒழுகுகின்றன’’ என்கின்றனர் செம்மஞ்சேரியில் வசிப்பவர்கள். அவர்கள் மேலும் கூறியதாவது:

அடையாறு, சாந்தோம், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடிசைப் பகுதி மக்களை சுனாமி குடியிருப்புக்குள் கொண்டு வந்து தங்க வைத்துள்ளனர்.

தி.நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அடையாறு பகுதிகளில் திடீர் தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதி மக்களும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படி வேறு காரணங்களுக்காக தங்க வைக்கப்படும் மக்களிடம் மாத வாடகையாக 300 ரூபாயும், பராமரிப்புக் கட்டணமாக 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

சென்னை நகருக்குள் வசித்த எங்களை சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் கொண்டு வந்து தங்க வைத்துள்ளனர். எங்களது தொழில் எல்லாம் நகருக்குள் இருக்கிறது. இதனால் தினமும் 4 மணி நேரம் பயணம் செய்து கஷ்டப்படுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in