

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிபிசிஐடி எஸ்.பி தில்லை நடராஜன் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் போலீஸாருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, நேற்று வேங்கைவயலில் உள்ள குடிநீர்த் தொட்டியைப் பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர், வெள்ளனூர் காவல் நிலையத்துக்குச் சென்ற எஸ்.பி தில்லைநடராஜன், அங்கு திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் டிஐஜி சரவண சுந்தர் கூறியது: இந்த விவகாரத்தில் காலதாமதமின்றி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல் துறையினருக்கு எந்த விதமான புற அழுத்தமும் இல்லை. இது கண்டிப்பாக சவால் நிறைந்த வழக்குதான்.
மிகவும் நுட்பமாகவும், அறிவியல் பூர்வமாகவும் மற்றும் சாட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தில் தமிழக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையானது சிபிசிஐடி பிரிவினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.