

திருச்சி: திருச்சி அருகே வாய்க்கால் தண்ணீரில் மூழ்கிய மாமியாரைக் காப்பாற்ற முயன்ற மருமகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் புது பெருங்களத்தூர் ஸ்ரீனிவாசநகர் சிவசங்கரன் குறுக்குத் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்குமார் (30). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு முகப்பேர் அருகேயுள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் தாரணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த சூழலில் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் பங்கேற்பதற்காக மனைவி தாரணி, மாமியார் விஜயா உள்ளிட்டோருடன் செந்தில்குமார் வந்துள்ளார். அங்குள்ள பெரிய வாய்க்காலில் குளித்தபோது எதிர்பாராமல் விஜயா நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற முயன்றபோது செந்தில்குமாரும் தண்ணீருக்குள் மூழ்கினார்.
அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து விஜயாவை உயிருடன் மீட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட செந்தில்குமார் சில மீட்டர் தூரத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.