

சென்னை புறநகர் பகுதிகளில் மின்தடை படிப்படியாக சீரடைந்து வருகிறது.
கடந்த வாரம் வீசிய புயலால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 450 மின்மாற்றிகள் மற்றும் 4 ஆயிரத்து 500 மின் பகிர்மான பெட்டிகள் சேதமடைந்தன. 54 உயரழுத்த மின்கோபுரங்கள் மற்றும் மின்தடங்களும் சேதமடைந்தன. மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரம் மின் பணியாளர்கள் உட்பட 14 ஆயிரத்து 700 மின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இரவு, பகலாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு வரும் மின்தடத்தில் உள்ள 54 உயரழுத்த மின்கோபுரங்கள் சேதமடைந்ததால் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் துணைமின் நிலையங்களுக்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சேதம் அடைந்த மின்கம்பிகள், மின்பகிர்மான பெட்டிகள் மற்றும் உயரழுத்த மின்கோபுரங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் புறநகர் பகுதியில் மின்தடை படிப்படியாக சீரடைந்து வருகிறது. எனினும், ஒருசில இடங்களில் மின்விநியோகம் தொடர்ந்து தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் கோபமடைந்து சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, “புயலால் சேதம் அடைந்த மின்கம்பிகள் போர்க் கால அடிப்படையில் சீரமைக் கப்பட்டு வருகின்றன. சீரமைக் கப்பட்ட இடங்களில் உடனுக் குடன் மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மின்விநியோகம் படிப்படியாக சீரடைந்து வருகிறது. வரும் வாரத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மின்விநியோகம் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்” என்றார்.