Published : 22 Jan 2023 04:25 AM
Last Updated : 22 Jan 2023 04:25 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் கட்டுப் பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 16-ம் தேதி முதல் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கட்டுப் பாடுகளை மீறி எருது விடும் விழாக்கள் நடைபெற்று வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். காளை ஓடும் பாதையான வாடிவாசல் முதல் சேருமிடம் வரையிலான நீளம் 100 மீட்டர் மட்டும் இருக்க வேண்டும்.
காளைகள் ஓடும் தளம் இலகுவதாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும். ஓடுதளத்தில் அதிகபட்சமாக 25 தன்னார்வலர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களுக்கு பிரத்யேகமாக உடைகள் சுழற்சி முறையில் வழங்கி ஓடுதளத்தில் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் யாரும் காளைகள் ஓடும் தளத்துக்குள் செல்ல அனுமதியில்லை.
காளைகள் சேருமிடம் விசாலமாக இருக்க வேண்டும். வாடிவாசல் மற்றும் விழா அரங்கம் நடைபெறும் இடத்தை கண்காணிப்பு கேமரா அல்லது வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். ஒரு காளை ஒரு சுற்றுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அடுத்த சுற்றுக்கு காளையை ஓடவிட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
விழா முடிந்ததும் காளை களுக்கு ஓய்வு அளித்து மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். மேற்கண்ட கட்டுப் பாடுகளை மீறினால் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படமாட்டாது’’ என தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT