

வேலூர்: பனமடங்கி கிராமத்தில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற எருது விடும் விழாவில் காளை முட்டி தூக்கி வீசியதில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள உம்ராபாத் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (24 ). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வேலூர் மாவட்டம் லத்தேரி அருகேயுள்ள பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை வேடிக்கை பார்ப்பதற்காக நண்பர்களுடன் வெங்கடேசன் கடந்த 17-ம் தேதி சென்றார்.
அப்போது, வேகமாக ஓடி வந்த காளை ஒன்று வெங்கடேசனை முட்டி தூக்கி வீசியது. இதில், அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் நேற்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து, பனமடங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு தொடங்கியுள்ள எருது விடும் விழாக்களில் இதுவரை ஒரு இளைஞர் மற்றும் ஒரு காளை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.