இடைத்தேர்தல் வேட்பாளர் முதல் ஜம்மு குண்டு வெடிப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.21, 2023

இடைத்தேர்தல் வேட்பாளர் முதல் ஜம்மு குண்டு வெடிப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.21, 2023
Updated on
3 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்," ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். 2026 ஆம் ஆண்டு வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தகுதியை பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது. அதனால் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவோம். கூட்டணிக் கட்சியினர் எங்களுடனும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவளிப்போம். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவோம். அதிமுகவின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இதற்கிடையில், சனிக்கிழமை மாலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இளைய மகனுக்கு வாய்ப்பு கோரியுள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும் இளைய மகனுக்கு வாய்ப்பு தருமாறு தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுகவிற்கு, முதல்வருக்கு காங்கிரஸ்காரன் என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி கட்சிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்கள் வர வேண்டும். எனது குடும்பத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கட்சி கூறினால் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன்'' என்றார்.

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் நிதி: நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையை வழங்கி உள்ளனர். தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சார்பில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வரிடம் வழங்கினர்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜன.22-ம் தேதி முதல் ஜன.25 வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தை அமாவாசைக்காக சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்: மூச்சுத் திணறலால் பக்தர் உயிரிழப்பு: தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலையேறும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவை பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்முவில் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் 7 பேர் காயம்: ஜம்முவின் நார்வால் பகுதியில் சனிக்கிழமை நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 7 பேர் காயம் அடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குண்டுவெடிப்புகள் குறித்து கேள்விப்பட்டதும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இடத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் குடியரசு தினவிழாவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்கோ - கோவா விமானத்திற்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கி வந்த சார்ட்டர் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சனிக்கிழமை அதிகாலையில் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இன்று(சனிக்கிழமை) அதிகாலை 4:15 மணிக்கு கோவாவின் டாம்போலி விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க வேண்டிய நிலையில், டாம்போலி விமானநிலையத்தின் இயக்குநருக்கு 12:30 மணிக்கு, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் இந்திய எல்லைக்குள் நுழைவதற்குள் உஸ்பெகிஸ்தானில் தரையிரக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மாஸ்கோ-கோவா விமானத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக விமர்சனத்திற்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி: தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் மேற்கொண்ட ஆய்வு போலியானது என விமர்சித்த பாஜகவுக்கு, அவர் பதிலடி கொடுத்துள்ளார். "என்னைப் பற்றி அவதூறுகளை, கேவலமான பொய்களை உரைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த பொய்களால் நான் அஞ்சிவிடமாட்டேன். எனது குறுகிய காலத்தில் நான் நிறைய பெரிய வேலைகளை செய்துள்ளேன்.

நான் பலமுறை இதுபோன்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். ஆனால் இவை எல்லாம் என்னைத் தடுக்காது. ஒவ்வொரு முறை நான் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் அது என் உள்ளே உள்ள நெருப்பை இன்னும் வலிமையாக்கியுள்ளது. எனது குரலை யாரும் அடக்க முடியாது. நான் தொடர்ந்து போராடுவேன். என் உயிர் உள்ளவரை அது தொடரும்" என்று ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஸ்வாதி மாலிவால் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேஷன் போலியானது என்றும், டெல்லி போலீஸாரை மோசமாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார் என்றும் பாஜக விமர்சித்திருந்தது.

"ஐபிஎல்-ன் போது ரிஷப் பண்ட் என் பக்கத்தில் இருக்க வேண்டும்" : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால், 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியாது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனான ரிஷப் பண்ட் தன் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐசிசி ரிவியூவுக்கு பாண்டிங் அளித்த பேட்டியில், "இந்த அணியின் ஒரு பண்பாட்டு தலைவர் என்றால் அது ரிஷப் பண்ட்தான். அனைவரையும் ஈர்க்கும், பலரையும் தொற்றிக்கொள்ளும் அவரது புன்சிரிப்பை இழக்க முடியுமா. நாங்கள் நேசிக்கும் அனைத்தையும் அவர் பெற்றிருக்கிறார். மார்ச் மத்தியில் அணியின் பயிற்சி முகாம் தொடங்கும்போது, ரிஷப் பண்ட் இருக்க முடிந்தால், அவரை முழு நேரமும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2023- ம் ஆண்டின் சர்வதேச கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணம் - யுனெஸ்கோ: 2023 ம் ஆண்டின் சர்வதேச கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐநாவின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24ம் தேதி சர்வதேச கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 5வது சர்வதேச கல்வி தினம் வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தை ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றம் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஆப்கன் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி திரும்ப வழங்கப்படுவதை வலியுறுத்தும் நோக்கில் ஐநா தலைமையகங்களில் அன்றைய தினம் கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி தினம் தொடர்பான தீர்மானம் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஐநா பொது அவையால் ஏற்கப்பட்டது. இதைடுத்து 2019 முதல் சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in