''மகிழ்ச்சிகரமான சந்திப்பு'' - அண்ணாமலை உடனான சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ் பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஓபிஎஸ்
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஓபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: "மாநில பாஜக தலைவரையும், கட்சியின் முன்னணி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தோம். சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. மாநில நலன் பற்றியும், மத்திய அரசின் நலன் பற்றியும் விரிவாக மனம்விட்டு பேசியிருக்கிறோம்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலையை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சனிக்கிழமை (ஜன.21) நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தல் குறித்து இன்று காலை ஊடகங்களுக்கு விரிவாக பேட்டி அளித்துள்ளேன். அந்த பேட்டியிலேயே ஊடகங்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் கூறியிருக்கிறேன்.

நாங்கள் இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்து, மாநில பாஜக தலைவரையும், கட்சியின் முன்னணி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். எங்களுடைய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. மாநில நலன் பற்றியும், மத்திய அரசின் நலன் பற்றியும் விரிவாக மனம்விட்டு பேசியிருக்கிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எங்களது அணி சார்பில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன். அப்போது ஒரு நிருபர், பாஜக போட்டியிட்டால் உங்களது நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார். தேசிய நலன் கருதி, பாஜக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முன்வந்தால் உறுதியாக எங்களுடைய தார்மீக ஆதரவை அளிப்பதாக கூறியிருக்கிறேன். அதேநிலைதான் இப்போதும்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in