Published : 01 Dec 2016 10:32 AM
Last Updated : 01 Dec 2016 10:32 AM

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பேரிடர் மேலாண்மை குழும உறுப்பினர் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி கரமாக உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழும உறுப்பினர் என்.சி.மார்வா கூறியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக, சென்னை உட்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந் நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பல் வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை தமிழக அரசு எடுத்துள் ளது. மாநில அளவிலும், மாவட்டங்கள்தோறும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக் கள் அமைக்கப்பட்டு, நீர்வழித் தடங்கள் தூர்வாரப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழும (என்டிஎம்ஏ) உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் என்.சி.மார்வா நேற்று முன்தினம் (29-ம் தேதி) சென்னை வந்தார். வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

என்டிஎம்ஏ உறுப்பினர் மார்வா ஆய்வின்போது தமிழகத்தில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் விரிவாக விளக்கினார். அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு பல்வேறு துறையினர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டதையும் எடுத் துரைத்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவை மார்வா சந்தித்தார். அப்போது, மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள், எடுக் கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக விரிவாக ஆலோ சனை நடத்தினார். இந்த சந்திப் பின்போது, வருவாய்த்துறை செயலர் பி.சந்திரமோகன், நிதித் துறை செலவினப் பிரிவு செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.

மேலும், இந்த சந்திப்பின் நிறைவில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக தலைமைச் செயலாளரிடம் பாராட்டு தெரிவித்த என்டிஎம்ஏ உறுப்பினர் மார்வா, பணிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார். பின்னர் எழிலக வளாகத்தில் உள்ள மாநில விரைவு சேவை மைய கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட அவர், அங்கிருந்த அலுவலர்களிடம் உரையாடினார். மாநில அளவில் அதிகாரிகளை தொடர்புகொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x