

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.
வேங்கைவயல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது.இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணை செய்தது. இதில் முன்னேற்றம் ஏற்படாததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் வேங்கைவயலில் ரூ.7 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கு ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி சத்தியமங்கலம் பகுதியில் ஊர்வலமாகச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸார் தடுத்ததைக் கண்டித்தும், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அந்த இடத்திலேயே ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.