

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பேபி என்ற பெயர் கொண்ட பட்டாசு ஆலை, வெம்பக்கோட்டை அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30), அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26), மாரிமுத்து (54), ராஜ்குமார் (38), மகேஸ்வரன் (42), மாரியப்பன் (42), தங்கராஜ் (49), ஜெயராஜ் (72) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வந்தனர். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (54)என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.