Published : 21 Jan 2023 02:35 PM
Last Updated : 21 Jan 2023 02:35 PM

சென்னை காவல் துறையின் “காவல் கரங்கள்” திட்டத்திற்கு “ஸ்காச் தங்க விருது” 

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” திட்டம் “ஸ்காச் தங்க விருது” வென்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை," 2022ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக ஸ்காச் குரூப் (SKOCH group) நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டங்களான காவல் கரங்கள் (சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்), சிற்பி (மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்), ஆனந்தம் (பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்), மகிழ்ச்சி (தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்), காவலர் விடுப்பு செயலி (காவலர்கள் எளிதில் அனைத்து வகையான விடுப்புகளை எடுப்பதற்கான செயலி திட்டம்) ஆகியவை முன்மொழியப்பட்டு விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஸ்காச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள். அவர்களுக்காக அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் ஓட்டளித்தனர். இதில் கடந்த அரை இறுதி சுற்றுக்கு காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றது.

நேற்று( ஜன.20) நடைபெற்ற இறுதிசுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் ORDER OF MERIT-2022 AWARD கிடைக்கப் பெற்றது. மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் “காவல் கரங்கள்” தகுதி பெற்று POLICE & SAFETY -2022-க்கான ஸ்காச் தங்க விருது – 2022 (Skoch Award-2022 - Gold) பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x