

பிரபல தொழிலதிபரும் ஒப்பந்ததாரருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோருக்கு சொந்தமாக சென்னை மற்றும் வேலூரில் உள்ள வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மொத்தம் 8 இடங் களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.100 கோடி ரொக்கம் மற்றும் 120 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூரை பூர்வீகமாகக் கொண்டவர் சேகர் ரெட்டி. தொழில் அதிபர் மற்றும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான இவர், சென்னையில் வசித்து வருகிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கம், வீராணம் ஏரி தூர்வாரும் பணி உட்பட பல்வேறு முக்கிய பணிகளை சேகர் ரெட்டி நிறுவனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆற்று மணல் எடுக்கும் ஒப்பந்த பணியையும் சேகர் ரெட்டி நிறுவனம் செய்து வந்ததாகத் தெரிகிறது. இவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, உறவினர் சீனிவாச ரெட்டி நண்பர் பிரேம் ஆகியோருக்குச் சொந்தமான அண்ணா நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் உள்ள 2 இடங்கள், வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்தி நகர் கிழக்கு 10-வது குறுக்குத் தெருவில் உள்ள வீடு உட்பட மொத்தம் 8 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.100 கோடி மற்றும் சுமார் 120 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாயின. ரூ.70 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து, வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சோதனையின் விவரம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தின் மதிப்பை வெளியிட மறுத்துவிட்டனர். சேகர் ரெட்டி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் சிலருடன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி யார்?
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி. ஆரம்ப காலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். மதிமுகவில் இருந்தவர் என்று கூறப்படுகிறது. 1996-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த சில மாதங்களிலேயே விலகினார்.
பின்னர், 2001-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் முக்கிய பதவிகள் ஏதும் இல்லாமல் சாதாரண அடிப்படை உறுப்பினரா கவே உள்ளார். அதேநேரம், கட்சியின் மேலிடத்தில் கிடைத்த நெருக்கத் தைப் பயன்படுத்தி முக்கிய ஒப்பந்தங் களைப் பெற்றார். நாளடைவில் நம்பிக் கையின் காரணமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா விடம் நன்மதிப்பை பெற்றார்.
திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார். மணல் குவாரி ஒப்பந்தம் மற்றும் இதர முக்கிய ஒப்பந்தங்கள் இவர் மூலமே நடப்பதாகவும் கூறப்படுகிறது.