

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தை முடக்க வாய்ப்பில்லை என்று கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட ஆதரவு தெரிவித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவு அதிமுகதொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்கதாக உள்ளது. திமுக அரசுபொறுப்பேற்று 20 மாத காலத்தில், அவர்கள் அளித்த தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
சொத்துவரி, மின் கட்டணஉயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு தோல்வியை அளித்து சரியான பதிலடிகொடுக்க மக்கள் காத்திருக்கின்றனர். அதிமுக வேட்பாளர், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மகத்தான வெற்றி பெறுவார். 2024 மக்களவை தேர்தலுக்கும், 2026-ல் மீண்டும் அதிமுக அரசு அமைவதற்கும் வழிகாட்டியாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமையும்.
நீதிமன்ற அமர்வு அங்கீகாரம்
இந்த தேர்தலில் கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. சின்னத்தை முடக்க வாய்ப்பில்லை. அது வதந்தி. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அங்கீகரித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்தாலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கவில்லை. அதனால், இடைத்தேர்தலில் ஏ மற்றும் பி படிவத்தை பழனிசாமி வழங்கினால் செல்லும். இரட்டை இலை சின்னம் முடக்கப் படாது. இவ்வாறு அவர் கூறினார்.