கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் செல்போனை பெற்றுக்கொள்ள விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு: சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்த பெற்றோர்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் செல்போனை பெற்றுக்கொள்ள விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு: சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்த பெற்றோர்

Published on

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளி வளாகத்தில், 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவிகடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய விசாரணை 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மாணவி பயன்படுத்தி வந்தசெல்போனை விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என சிபிசிஐடி போலீஸார், மாணவியின் பெற்றோருக்கு பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், பெற்றோர் செல்போனை ஒப்படைக்க மறுத்து வந்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, மாணவியின் செல்போனை உடனே ஒப்படைக்குமாறு பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் செல்போனை ஒப்படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், செல்போனைப் பெற்றுக்கொள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி மறுத்து விட்டார். மேலும், செல்போனை சிபிசிஐடிவிசாரணை அதிகாரியிடம் வழங்கி, அதற்கான ஒப்புதல் சான்றை பெற்றுக்கொள்ளுமாறு மாணவியின் பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் கோமதியிடம், மாணவியின் தாய் செல்வி நேற்று செல்போனை ஒப்படைத்தார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, மாணவிபயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in