

பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண இணையதளம் மூலமாக 55,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஜன. 21) குலுக்கல் முறையில் 2,000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதிகாலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 18-ம் தேதி முன்பதிவுதொடங்கி நேற்று வரை நடைபெற்றது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். நேற்று மாலை வரை 55,000-க்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தைக் காண முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இன்று கணினி மூலம் குலுக்கல் முறையில் 2,000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நாளை (ஜன. 22) மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல்எண் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
பின்னர், அவர்கள் வரும் 23, 24-ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை, தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாளச் சான்று நகலுடன், ரயில்வே பீடர் சாலையில் உள்ளவேலவன் விடுதியில் கும்பாபிஷேகத்துக்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதிசெய்யப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.