Published : 21 Jan 2023 06:46 AM
Last Updated : 21 Jan 2023 06:46 AM

கோவை குற்றாலம் நுழைவுச்சீட்டு விற்பனை: ரூ.35 லட்சம் முறைகேடு வனவர் பணியிடை நீக்கம்

கோவை: கோவையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு நுழைவுச்சீட்டு வழங்க கூட்டம் இருக்கும்போது 2 இயந்திரங்களும், கூட்டம் இல்லாதபோது ஓர் இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதில், கூட்டம் உள்ள நேரங்களில் இரு இயந்திரங்களைப் பயன்படுத்திவிட்டு, ஓர் இயந்திரத்தில் பதிவான தொகையை மட்டும் கணக்கில் காட்டியுள்ளனர். மற்றொரு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுத் தொகையை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை, வசூலாகும் தொகையில் முரண்பாடுகள் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், வனத்துறை உயரதிகாரிகள் விசாரணைமேற்கொண்டனர். இதில், நுழைவுச்சீட்டு இயந்திர முறைகேடு அம்பலமானது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, “போளுவாம்பட்டி முன்னாள் வனச்சரக அலுவலர் சரவணன், வனவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கடந்த ஓராண்டாக நுழைவுச்சீட்டு விற்பனையில் முறைகேடு செய்து, முறையே ரூ.23 லட்சம், ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

வனவர் ராஜேஷ்குமார் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு ரூ.35 லட்சத்தை ஒப்படைத்தார். அந்த தொகை சூழல் சுற்றுலாக் குழு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. தொடர்ந்து, வனவர் ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வனச் சரக அலுவலர் சரவணன்தற்போது மதுரை மண்டலத்தில் பணிபுரிவதால், அவரை பணியிடை நீக்கம் செய்ய மதுரை வனப்பாதுகாவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, “மோசடி தொடர்பாக காருண்யா நகர் போலீஸில் புகார்அளிக்கப்பட்டுள்ளது. வனத் துறைசார்பில் உதவி வனப் பாதுகாவலர்கள் இருவர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஒரு பெண்ணும், மோசடிக்கு உடந்தையாகஇருந்துள்ளார். அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரிடமும் போலீஸார் விசாரிப்பார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x