

முதுமலை: பனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வறட்சி நிலவுவதால், முதுமலை வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் இடம்பெயர தொடங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. உறைப் பனி தாக்கத்தால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல்வெளிகள் கருகிவிட்டன. காலை நேர வெப்பநிலை 24.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை 2.6 டிகிரி செல்சியஸாகவும் குறைந்துள்ளது.
உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்துவிட்டன. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர் - கக்கநல்லா சாலை, மசினகுடி - முதுமலை சாலையோரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இவை உணவு தேடி சாலையோரங்களுக்கு வருகின்றன. குறிப்பாக யானை, மான்கள் கூட்டமாக வலம் வருகின்றன. திடீரென சாலையை கடக்கின்றன. இதனால், வேகமாக வரும் வாகனங்களில் விலங்குகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, "செல்ஃபி மோகம் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் விலங்குகளை கண்டவுடன் செல்ஃபி எடுக்கின்றனர். இதனால், அவற்றுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.