குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை: முப்படை வீரர்கள் பங்கேற்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை: முப்படை வீரர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடியரசு தினவிழா வரும் 26-ம்தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை முன்பு நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான மேடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்கான முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே நடைபெற்றது.

இதில், தரைப்படை, விமானப்படை, கப்பற்படை, காவல் துறை, தீயணைப்பு துறையினர், தேசிய மாணவர் படையினர், பெண் காவலர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

முதல்நாள் ஒத்திகையே மிக பிரம்மாண்டாக நடந்தது. மேலும், போக்குவரத்து போலீஸாரும் இருசக்கர வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இரண்டாவது நாள் ஒத்திகை நாளை (ஜன.22) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி இறுதி ஒத்திகை நடைபெற உள்ளது. அணிவகுப்பு நடைபெறும் தினங்களில் அப்பகுதிகளில் போலீஸார் ஏற்கெனவே போக்குவரத்து மாற்றங்களைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in