

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது
இதுகுறித்து அக்கட்சியின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு மத நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இல்லாமல், கோயில்களின் மரபு சார்ந்த விஷயங்களில் தலையிட்டு தொடர்ந்து அத்துமீறல்களை செய்து வருகிறது. தமிழக மக்களின் ஆன்மிக உணர்வுகளை புண்படுத்துகிறது.
எனவே, திமுக அரசை கண்டித்தும், இந்து சமய அறநிலையத் துறையில் அரங்கேற்றி வரும் அவலங்களை வெளிப்படுத்தவும் சென்னையில் இன்று (ஜன.21) உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. வள்ளுவர் கோட்டம் அருகே நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை தலைமை வகிக்கிறார்.
அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்களுக்காக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.