Published : 21 Jan 2023 06:58 AM
Last Updated : 21 Jan 2023 06:58 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற அனுமதியுடன் திருவள்ளூர் அருகே சேவல் சண்டை போட்டிகள் தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவள்ளூர் அருகே தங்கானூர் கிராமத்தில் நேற்று 3 நாள் சேவல் சண்டை போட்டிகள் தொடங்கின.

திருவள்ளூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, திருவள்ளூர் அருகே தங்கானூர் கிராமத்தில் நேற்று 3 நாள் சேவல் சண்டை போட்டிகள் தொடங்கின.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் சேவல் சண்டை சூதாட்டப் புகார் காரணமாக தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் அருகே தங்கானூரில் பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி கோரி, போட்டி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், ’சேவல்களை துன்புறுத்தக்கூடாது, போட்டி நடைபெறும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது, சேவலுக்கு மது கொடுக்கக் கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், தங்கானூரில் சேவல் சண்டை போட்டிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதையடுத்து, தங்கானூர் கிராமத்தில் நேற்று 3 நாள் சேவல் சண்டை போட்டிகள் தொடங்கின. இதனால், தங்கானூர் கிராமம் நேற்று விழாக்கோலம் பூண்டது. இப்போட்டிகளில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சேவல்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த சேவல்களும் களமிறக்கப்பட்டன.

முதல் நாளான நேற்று மட்டும் நூரி, கதர், ஜாவா, யாகூத், கிளிக்கொண்டை, வெள்ளை கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. போட்டிகளில் பங்கேற்ற சேவல்கள் ஒன்றுக்கொன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் 3 நாள் போட்டித் தொடரில் வெற்றி பெறும் சேவலுக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனமும் 2-ம் பரிசாக 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனமும் வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x