Published : 21 Jan 2023 07:13 AM
Last Updated : 21 Jan 2023 07:13 AM
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பார்சல்கள் பலகட்ட சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.
நாட்டின் 74-வது குடியரசு தினம்வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் முக்கிய பேருந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு கடந்த 19-ம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவுவாயில் பகுதியிலேயே நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு படையினர் சோதனை செய்கின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், மெட்டல் டிடெக்டர்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் விமானநிலைய வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன நிறுத்தம் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனை செய்து விசாரிக்கின்றனர். விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மோப்ப நாய்களுடன் சென்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிக்கின்றனர்.
விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருவதற்கான தடை ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளாக அமலில் உள்ள நிலையில், அந்த கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது. பணியாளர்களுக்கான அனுமதி பாஸ் வழங்குவதிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
பயணிகளுக்கு அறிவுறுத்தல்
விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான சோதனை மட்டுமின்றி, விமானத்தில் ஏறும்போது மீண்டும் ஒருமுறை சோதனை நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக, உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம்முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாகவும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் திரவப் பொருட்கள், எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்சல்களும் பலகட்ட சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜன.30-ம் தேதி நள்ளிரவுவரை இந்த பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் இருக்கும். தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 24, 25, 26-ம் தேதிகளில் உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT