

காங்கிரஸ் கட்சியின் 132-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சி சார்பில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 132-வது ஆண்டு விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லி சென்றிருப்பதால் மூத்த தலைவர் குமரி அனந்தன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய குமரி அனந்தன், கடந்த 132 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வரலாறு, மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது சாதனைகளை நினைவு கூர்ந்தார். பின்னர் சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த மகாத்மா காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி உள்ளிட்ட மறைந்த காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு குமரி அனந்தன், முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.