தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க முடியாதது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "நூறு சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால், அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தாழ்தள பேருந்துக்குள் புகுந்து விடும்" என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தாழ்தள பேருந்துகள் என்பது மாற்றுத் திறனாளிகளுக்கானது எனக் கூறுவது தவறானது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றளவும் சவாலானதாக உள்ளது. எனவே கொள்முதல் செய்யக்கூடிய பேருந்துகளில் நூறு சதவீத பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றியமைக்க கூடாது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், இதுதொடர்பாக உள்ள தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் சார்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நூறு சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால், அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தாழ்தள பேருந்துக்குள் புகுந்து விடும்.

ஒரு தாழ்தள பேருந்தின் விலை 80 லட்சம் ரூபாய். அதனை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்க 41 ரூபாய் செலவாகும். சாதாரண பேருந்துகளுக்கு இதில் பாதி செலவே ஆகிறது. மேலும், தாழ்தள பேருந்துகள் பராமரிப்புக்கு தனி வசதிகள் தேவைப்படும். இந்த காரணங்களால்தான், நூறு சதவீதம் தாழ்தள பேருந்துகளை இயக்கவது சாத்தியமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேருந்துகளின் பின்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சாய்தளம் பாதை அமைக்க முடியுமா? என்பது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து பொறியாளர்காளிடம் ஆலோசித்து தெரிவிக்கும்படி அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in