Published : 20 Jan 2023 03:39 PM
Last Updated : 20 Jan 2023 03:39 PM

இரட்டை இலை சின்னத்தை விடமாட்டோம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

புகழேந்தி | கோப்புப்படம்

சென்னை: "சின்னம் எங்களிடம் இருப்பதால்தான் அவர்கள் சின்னம் இல்லாமல் சாலையில் அலைகின்றனர். அந்தப் பேச்சுக்கு இடமே இல்லை. இரட்டை இலையை விடவே மாட்டோம். அதற்கான பட்டா வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம்தான்" என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி வெள்ளிக்கிழமை (ஜன.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "எடப்பாழி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் நான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இன்றளவும், தேர்தல் ஆணையத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர்தான் உள்ளது.

எனவே, வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கோரிக்கை வைக்கப்போகிறோம். இந்த விவகாரத்தில் அவரே கையெழுத்திட்டு, கடிதம் அனுப்பியுள்ளதால் தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து மட்டும் போதும்.

சின்னம் எங்களிடம் இருப்பதால்தான் அவர்கள் சின்னம் இல்லாமல் சாலையில் அலைகின்றனர். அந்தப் பேச்சுக்கு இடமே இல்லை. இரட்டை இலையை விடவேமாட்டோம். அதற்கான பட்டா வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம்தான்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமாக கடந்தமுறை போட்டியிட்டிருந்தது. இந்நிலையில், தமாக அந்த தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளதைத் தொடர்ந்து அதிமுக அந்த தொகுதியில் களம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், தங்களது தரப்பை அங்கீகரிக்க கோரி இருதரப்பிலும் தேர்தல் ஆணையத்திலும் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சேலத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x