புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் முரண்பாடு: நாராயணசாமி குற்றச்சாட்டு

நாராயணசாமி | கோப்புப் படம்
நாராயணசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: “புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜகவுக்கும் முரண்பாடு உள்ளது. இரு தரப்பும் மக்களை ஏமாற்றுகின்றனர்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி வந்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானதுதான். ஆனால், மாநில அந்தஸ்து தர ஆலோசனை தருமாறு நீதிபதிகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதல்வர் கூறியுள்ளது புரியாத புதிர். நீதிபதிகள் ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. சட்ட வல்லுநர்களைதான் அவர் ஆலோசிக்க வேண்டும். எங்கு எந்த கோரிக்கை வைப்பது என்பது தெரியாமல் முதல்வர் தள்ளாடுகிறார். அதே நேரத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் மனு தரும்போது பாஜக தரப்பு தேவையில்லை என்பது முரண்பாடானதாக உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசு நிதி குறையும் என்பது தவறான கருத்து. அத்துடன் மத்திய அரசு தற்போது ரூ.1721 கோடிதான் தருகிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் அல்ல. 2022-23 நிதியாண்டில் புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி தந்ததாக பாஜகவால் நிருபிக்க முடியுமா? பொய் பிரச்சாரம் செய்வதற்கு பத்மஸ்ரீ விருதை பாஜகவுக்கு தரலாம். உண்மையில் ஆட்சியிலுள்ள ரங்கசாமியும், என்ஆர் காங்கிரஸும், பாஜகவும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஐடி, சிபிஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை தங்களின் கைப்பாவையாக வைத்திருப்பது போல் நீதிமன்றங்களையும் கைப்பாவையாக வைத்திருக்க மத்திய அரசி முயற்சி செய்ததன் வெளிபாடுதான் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்க வைக்க முயற்சிப்பதும்தான். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செயல்பாடானது, நீதிபதிகள் நியனத்துக்கு தன்னாட்சிக் கொண்ட கொலிஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்றங்களை விமர்சிக்கும் பணியை பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் மூலம் செயல்படுத்துகிறார்.

தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 90 சதவீத வழக்குகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரானவை. தற்போது நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு பிரதிநிதிகள் இடம்பெறுவது எப்படி சரியாகும்? இது ஜனநாயகத்துக்கு எதிரானது.

புதுச்சேரி அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தற்போது பொதுப் பணித்துறையில் ஒப்பந்தம் எடுப்போர் 13 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது. ஏற்கெனவே கலால், உள்ளாட்சித் துறை, காவல் துறை ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு முதல்வர் வாய்திறக்கவே இல்லை” என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in