ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
Updated on
1 min read

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம், 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகளைக் கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து தற்போதைய சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

12 கேள்விகள்: முதல்கட்டமாக சந்தேக நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த திண்டுக்கல் மோகன்ராம் (44), அதே மாவட்டத்தைச் சேர்ந்த நரைமுடி கணேசன் (49), தினேஷ்குமார் (38), மயிலாடுதுறை சத்யராஜ் (40) ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையை டெல்லி மத்திய தடயவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மேற்கொண்டனர். ராமஜெயம் கொலை தொடர்பாக அவர்களிடம் தலா 12 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டன.

அதைத்தொடர்ந்து, செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்திரன் ஆகிய மேலும் 4 பேரிடம் நேற்று இந்த சோதனை நடைபெற்றது. கேட்கப்பட்ட கேள்விகள், அளிக்கப்பட்ட பதில்கள் அனைத்தும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in