Published : 20 Jan 2023 06:01 AM
Last Updated : 20 Jan 2023 06:01 AM
விருதுநகர்/சிவகாசி: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேரும், சிவகாசி அருகே உள்ள ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவரும் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று ஒரு அறையில் பட்டாசுகள் தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழந்ததில், அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 7 பேர் காயங்களுடன் சிவகாசி , சாத்தூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
வெம்பக்கோட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி உடல் சிதைந்த நிலையில் ஆண் உடல் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் சிவகாசி அருகே அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60) என தெரியவந்தது.
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
நேற்று காலை அறை ஒன்றில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு அறை முழுவதும் தரை மட்டமானது. அங்கு பணியாற்றிய ரவி(60), சாமுவேல் ஜெயராஜ்(45) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டனர். இதில் ரவி உயிரிழந்தார். சாமுவேல் ஜெயராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்
விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT