

ஜெயலலிதா நினைவிடத்தில் 6-வது நாளாக நேற்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நடிகை த்ரிஷா தனது தாயாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப் பட்டது. அன்று முதலே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் ஜெயலலிதா நினை விடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
6-வது நாளாக நேற்றும் ஏராள மானோர் நினைவிடத்துக்கு வந்திருந்தனர். விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் வசதிக்காக எம்ஜிஆர் நினைவிடம் வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. நினைவிடத்தில் உதிரிப்பூ விற்பனை நேற்று களைகட்டியது.
நடிகை த்ரிஷா அவரது தாயுடன் நேற்று காலை ஜெயலலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெயந்திலால் சலானி, செயலாளர் சாந்தகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா பேரவை தீர்மானம்
இதைத்தொடர்ந்து, நேற்று நண்பகல் 12 மணியளவில் அமைச்சர் கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, சரோஜா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி ஆகி யோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டது. அந்த தீர்மானத்தை ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வாசித்தார்.
அந்த தீர்மானத்தில், ‘ராணுவ கட்டுக்கோப்புடன் தொடர்ந்து அதிமுகவை வழி நடத்த சசிகலாதான் ஒரே நம்பிக்கையாக நமக்கு கிடைத் துள்ளார். இந்தக் கருத்துக்குமாற்று இந்த இயக்கத்தில் இல்லை. அப்படி யாரேனும் மாற்றுக் கருத்து கொண் டிருந்தால் அவர் இந்த இயக்கத்தின் உண்மை தொண்டனாக இருக்க மாட்டார். ஆகவே, பொதுச்செயலா ளராக பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக அமைப்பு ரீதியான 50 மாவட்டங்களின் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களும் இணைந்து சசிகலாவை வலியுறுத்துகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.