Published : 20 Jan 2023 04:00 AM
Last Updated : 20 Jan 2023 04:00 AM
கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வரும் 24-ம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, கோவை சின்னதடாகம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று, 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் மறுநாள் அதிகாலை அதிமுக ஆதரவு பெற்ற எஸ்.சௌந்திர வடிவு என்பவர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, சுதா கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அதில், தேர்தலில் பதிவான வாக்குகளை நீதிமன்றத்தின் முன் மீண்டும் சரியாக எண்ண உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த சரியான அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் நியமிக்க வேண்டும்.
மறு வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து, அந்த முடிவின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளைக் கொண்டே அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர், தேர்தலில் போட்டியிட்ட எஸ்.சௌந்திர வடிவு, எஸ்.மல்லிகா, கே.சுதா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜி.எஸ்.சமீரன் வரும் 24-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தெரிவித்துள்ளார்.
எனவே, குருடம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அருணாநகர், சமுதாய நலக்கூடத்தில் 24-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT