பழகும்போது பண்பாடு குறையாதவர் சோ - வீரமணி புகழஞ்சலி

பழகும்போது பண்பாடு குறையாதவர் சோ - வீரமணி புகழஞ்சலி
Updated on
1 min read

சனாதனத்தின் எழுத்துலக வக்கீல் சோ. ஆனால் பழகும் போதோ பண்பாடு குறையாதவர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோவின் மறைவு குறித்து இன்று வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நண்பர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைகிறோம். மருத்துவமனையில் அவரது உடல் நிலை அடிக்கடி கவலைக் கிடமாவதும், அவர் மீண்டும் வந்து தன் எழுத்துப் பணியைத் தொடருவதுமாக இருந்தது. அதனால் இம்முறையும், அவர் நலம் பெற்று மீளுவார் என்று நம்பினோம்.

திராவிடர் இயக்க கொள்கைகளுக்கான கடும் எதிரி அவர்; தயவு தாட்சண்யமின்றி, விமர்சிப்பவர். ஆனால், நட்பு முறையில் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், பழகுவார். அவரது நகைச்சுவையும், நையாண்டி எழுத்துக்களும், எதிரிகளாலும் அவர் யாரைத் தாக்குகிறாரோ அவர்களாலும் ரசிக்கப்படக்கூடியவை. எந்த பேட்டி, சந்திப்பு என்றாலும் மாற்றாமல் அப்படியே வெளியிடும் அவரது பண்பும், பழக்கமும் ஊடகவியலாளர்கள் பின்பற்ற வேண்டிய அருங்குணமாகும்.

என்னிடம் பலமுறை பேட்டிகள் எடுத்து உரையாடிடும் வாய்ப்பும் பெற்றவர்.நானும், அவரும் சமரசம் செய்து கொள்ளாத கடும் கொள்கை எதிரிகள்; ஆனால், ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாது, வெறுப்புக் கொள்ள முடியாது பழகிய பான்மையர்கள்.

திருச்சியிலுள்ள எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அவரை அழைத்துச் சென்ற போது, பெரியார் கல்வி நிறுவனங்களின் சிறப்பை வெகுவாகப் பாராட்டியவர். சனாதனத்தின் எழுத்துலக வக்கீல் அவர்; ஆனால் பழகும் போதோ பண்பாடு குறையாதவர்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரின் நிழலான துக்ளக் ரமேஷுக்கும், துக்ளக் வாசகர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கூறுகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in