

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த எருதாட்டத்தின்போது மாடு முட்டியதில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்றாய கவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (55). ஊர்த்தலைவர். கடந்த 17-ம் தேதி புலியரசி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவைக் காண ராமசாமி சென்றார். அப்போது, மைதானத்தில் ஓடிவந்த மாடு இவரை முட்டித் தள்ளியது.
இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் எருதாட்ட நிகழ்ச்சிகளின் போது மாடு முட்டி ராஜி (72) என்ற மூதாட்டி, பவன்குமார் (11) என்ற சிறுவன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் தற்போது ராமிசாமி உயிரிழப்பின் மூலம் மாடு முட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.