Published : 20 Jan 2023 06:05 AM
Last Updated : 20 Jan 2023 06:05 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக செய்முறைபயிற்சிகள் உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக அமெரிக்க-இந்திய அறக்கட்டளையின் உதவியில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் ஸ்டெம் வகையிலான நவீன கணித, அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை இந்த ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
அமெரிக்க-இந்திய அறக்கட்டளை மூலம் சென்னையில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் பயிலும் 200 மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் குறித்த செய்முறை பயிற்சி தரப்பட்டது. அதன்வாயிலாக மாணவர்களே வடிவமைத்த ராக்கெட் மாதிரிகள், சிறிய ரக ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாணவிகள் வடிவமைப்பில் சிறிய ட்ரோன் செயற்கைக்கோள் மூலம் குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட தரவுகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன.
விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி காணொலிக் காட்சி வாயிலாக பேசும்போது, ‘‘இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் உள்ள ஒருஅரசுப் பள்ளியில்தான் ஸ்டெம் வகை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு இளம் விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். இத்தகைய முன்னெடுப்புகள் அதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளிகளில் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுவதன் மூலமே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்’’என்றார்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது; உலகத்தில் அதிக மக்கள் தொகை நாடுகளில் ஒன்றாக இந்தியாதிகழ்கிறது. நம்மிடம் உள்ள இளைஞர்கள் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைபள்ளிகளிலேயே தொடங்க வேண்டும்.
ஆனால், விளையாட்டுக்கு கொடுக்கும் அளவுக்குகூட அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்க நமக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். அதற்கு வானவில் மன்றம் திட்டம் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்டஇயக்குநர் க.இளம் பகவத், அமெரிக்க-இந்திய அறக்கட்டளையின் இயக்குநர் மேத்யூ ஜோசப் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT