

‘வார்தா’ புயலால் சென்னை எழும்பூர் அரசு கவின்கலை கல்லூரி வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து கோரமாக காட்சியளிக்கின்றன.
சென்னை எழும்பூர் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அரசு கவின்கலை கல்லூரிக்கு வயது 166. தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1850-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் சுமார் நான்கரை ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இக் கல்லூரி விளங்குகிறது. இங் கிருந்துதான் லண்டனில் உள்ள விக்டோரியா மகாராணிக்கு கலைநயமிக்க மரப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான ஓவியர் கள், சிற்பக் கலைஞர்களை உருவாக்கியுள்ள இக்கல்லூரி வளாகத்தில் நூறாண்டுகளைக் கடந்த மரங்கள் உட்பட 212 மரங் கள் இருந்தன. கடந்த 12-ம் தேதி சென்னையைத் தாக்கிய வார்தா புயலுக்கு இக்கல்லூரியும் தப்ப வில்லை. 110 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 80-க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 100 ஆண்டுகளைக் கடந்த தூங்குமூஞ்சி மரங்கள் எனப்படும் மழை மரங்கள், புளியமரங்களும் வேரோடு சாய்ந்து கிடக்கும் காட்சி மனதை வருத்துகிறது. 50 ஆண்டுகளைக் கடந்த வேம்பு, பூவரசு மரங்களும் சரிந்து விழுந்து கிடக்கின்றன. 80-க்கும் அதிகமான மரங்கள் குறுக்கும், நெடுக்குமாக விழுந்து கிடக்கும் காட்சியை இக்கல்லூரி பணிபுரியும் ஆசிரியர்களும், மாணவர்களும் வேதனையோடு பார்த்துச் செல் கின்றனர்.
மரங்கள் விழுந்து போர்க் களம்போல காட்சியளிக்கும் வளா கத்தை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி முதல்வர் மதியழகனிடம் கேட்டபோது, ‘‘புயலடித்து ஓய்ந்த திங்கள்கிழமை மாலை கல்லூரிக்கு வந்தேன். வேரோடு சாய்ந்த மரம் உள்ளே செல்ல முடியாதபடி நுழைவு வாயிலை அடைத்துக் கொண்டிருந் தது. உள்ளே நுழைந்த நாங்கள் பேரதிர்ச்சி அடைந்தோம். மாணவ ராக, ஆசிரியராக, முதல்வராக கடந்த 35 ஆண்டுகள் இந்த வளாகமே எனது வாழ்க்கை. இங்கு சூரிய வெப்பத்தையே நாங்கள் உணர்ந்ததில்லை. இன்றுதான் முதல்முறையாக சூரிய வெப் பத்தை உணர்கிறோம். 100 ஆண்டு கள், 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இங்கு படித்த கலைஞர்கள் இந்த கோரக் காட்சியை எப்படி தாங்கப் போகிறார்களோ தெரியவில்லை'' என்றார்.
மிக உயர்ந்த மரங்கள் விழுந்த தால் பழமையான கட்டிடங்களும், மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த ஓடுகளும் சேதமடைந்துள்ளன. இதனால் கல்லூரிக்கு காலவரை யற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. ‘‘கீழே விழுந்த மரங்களை அப்புறப்படுத்த கலை, பண்பாட்டுத் துறைக்கும், பொதுப்பணித் துறைக் கும் தகவல் கொடுத்துள்ளோம். மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஓர ளவுக்கு சீரமைத்த பிறகே கல்லூரி திறக்கும் நாள் அறிவிக்கப்படும்'' என மதியழகன் தெரிவித்தார்.
இந்நிலையில் சேதமடைந்த இக்கல்லூரி வளாகத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
விழுந்துகிடந்த மரங்களைச் சோகத்துடன் பார்த்துக் கொண் டிருந்த முன்னாள் மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘கலைக் காக மட்டுமல்ல, மரங்களுக்காகவும் இங்கு படித்தவர்கள் நாங்கள். விழுந்த மரங்களுக்குப் பதிலாக வலிமை குறைந்த தூங்குமூஞ்சி மரங்களை நடாமல், வலிமையான வேம்பு போன்ற மரங்களை நட வேண்டும். சேதமடைந்த கட்டிடங் களைச் சீரமைக்க சில கோடிகள் தேவைப்படும். எனவே, போதுமான நிதி ஒதுக்கி பாரம்பரியமிக்க கலைப் பொக்கிஷமான இக்கல்லூரியை காக்க வேண்டும்'' என்றனர்.