

‘வார்தா’ புயல் காரணமாக காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கில் மரங்கள் சாய்ந்தன. விளம்பர பலகைகள், கூரைகள் பறந்தன. மின்சார வயர்கள் மற்றும் மின் கம்பங்கள் சாயந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 28 செ.மீ மழை பதிவானது.
வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 600 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட பல்லாயிரக்கணக்கான மரங்கள் சூறாவளிக் காற்றில் முறிந்துவிட்டன. விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலைமை சீரடைந்த பின்னரே பார்வையாளர் களுக்கு அனுமதி வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாமல்லபுரம்
கடலோர பகுதிகளான உய்யாலிகுப்பம், கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் 800-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால்,கிராமப் பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் கடற்கரை பகுதியில் சிறு வியாபாரிகளின் கடைகளின் மேற்கூரைகள் சூறைக்காற்றில் பறந்து சென்றன.
மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் செல்லும் சாலை யில் உள்ள ஏராளமான மின் கம்பங்களின் மீது மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையின் பல்வேறு இடங்களில் விழுந்ததால் அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வில்லியம்பாக்கம் அருகே மாவட்ட ஆட்சியர் வந்த வாகனமும் சாலையில் சிக்கியது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 493 பேர், 30 புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 11-ம் தேதி இரவு துண்டிக்கப்பட மின் இணைப்பு நேற்று மாலை வரை விநியோகிக்கப்பட வில்லை. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.
பழவேற்காடு மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் வங்க கடலில் கடும் சீற்றம் ஏற்பட்டது. பழவேற்காடுவைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பல படகுகள் நூறு மீட்டர் தூரத்துக்கும் மேல் தூக்கி வீசப்பட்டன. ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.