

மதுரை / புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. அந்த தொட்டியிலுள்ள குடிநீரை குடித்த குழந்தைகள் உட்பட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமை பல வடிவங்களில் நடைமுறையில் உள்ளது. மாவட்டத்தில் 33 கிராமங்களில் தீண்டாமை கொடுமை குறித்து முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 23 கிராமங்களில் 49 கோயில்களில் பட்டியலின மக்களை அனுமதிப்பதில்லை. வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள முருகன்கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அந்த கோயிலில் பட்டியலின மக்களுக்கு மண்டகபடி உரிமை வழங்குவதில்லை. 14 கிராமங்களில் 29 டீ கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது.
நெடுவாசல், வேம்பங்குடி, கூத்தன்குடியில் பொது கண்மாய்களில் பட்டியலின மக்கள் குளிக்க அனுமதிப்பதில்லை. எனவே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கவும், இரட்டை குவளை முறையை ஒழிக்கவும், கோயில்கள், பொது கண்மாய்களில் பட்டியலின மக்களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
பின்னர், அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘வேங்கைவயல் சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இரட்டை குவளை முறை மற்றும் தீண்டாமை குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இதையடுத்து மனுதாரரின் புகார் தொடர்பாக ஆட்சியர், சிபிசிஐடி எஸ்பி, மாவட்ட எஸ்.பி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்.2-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
45 பேரிடம் விசாரணை: இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர் கிராமங்களைச் சேர்ந்த 45 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.